கலை, பண்பாட்டு துறையின் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
கலை, பண்பாட்டு துறையின் விருதுகள் பெற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
கோத்தகிரி
கலை, பண்பாட்டு துறையின் விருதுகள் பெற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
விருது
நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாவட்ட கலெக்டரின் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றம் மூலமாக ஆண்டு தோறும் 15 கலைஞர்களுக்கு கலை, பண்பாட்டு துறை மூலம் விருதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி 18 வயதும் அதற்கு உட்பட்டோருக்கு "கலை இளமணி" விருதுடன் பரிசுத்தொகை ரூ.4 ஆயிரத்திற்கான காசோலையும், 19 வயது முதல் 35 வயது பிரிவினருக்கு "கலை வளர்மணி" விருதுடன் பரிசு தொகை ரூ.6 ஆயித்துக்கான காசோலையும், 36 வயது முதல் 50 வயது பிரிவினருக்கு "கலை சுடர்மணி" விருதுடன் பரிசு தொகை ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையும், 51 வயது முதல் 65 வயது பிரிவினருக்கு "கலை நன்மணி" விருதுடன் பரிசுத்தொகை ரூ.15 ஆயிரத்திற்கான காசோலையும், 65 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு "கலை முதுமணி" விருதுடன் பரிசுத்தொகை ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட உள்ளன.
விண்ணப்பிக்கலாம்
எனவே நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பாடகர்கள், நாதஸ்வரம், தவில், வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், பழங்குடியினர் பாரம்பரிய இசைக்கருவிகள் இசைக்கும் கருவி இசையாளர்கள், பரதநாட்டியம், படுகர் நடனம், கோத்தர், இருளர், பனியர், குரும்பர் நடனம் போன்ற நடனத்தில் சிறப்பு பெற்றவர்கள், நாடக கலைஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள், இளைஞர்கள் இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம்.
தகுதியுள்ளவர்கள் தங்களது சுயவிவர குறிப்புடன் வயது மற்றும் பணிஅறிவு ஆகியவற்றை குறிப்பிட்டு, புகைப்படத்துடன் வயது மற்றும் முகவரிக்கான உரிய சான்றிதழ்களுடன் கலை பண்பாட்டு துறையின் https://artandculture.TN.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விருது பெற அடுத்த மாதம் 13-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.