நாட்டின் தொன்மையான பண்பாட்டை யோகா வெளிப்படுத்துகிறது

நாட்டின் தொன்மையான பண்பாட்டை யோகா வெளிப்படுத்துகிறது என மத்திய மந்திரி அன்னபூர்ணா தேவி கூறினார்.

Update: 2022-06-21 20:51 GMT


நாட்டின் தொன்மையான பண்பாட்டை யோகா வெளிப்படுத்துகிறது என மத்திய மந்திரி அன்னபூர்ணா தேவி கூறினார்.

யோகா நிகழ்ச்சி

தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் 8-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி நேற்று யோகா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னபூர்ணா தேவி தொடங்கி வைத்து பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-நமது நாட்டு மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ள யோகா உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களையும் ஒருங்கிணைக்க தூண்டுதலாகவும், உந்துசக்தியாகவும் விளங்குகிறது. பண்பாட்டு சிறப்பு மிக்க தஞ்சை பெரியகோவில் பின்னணியில் பெரும் திரளாக மாணவர்கள் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து யோகா பயிற்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தொன்மையான பண்பாடு

யோகாவை உடற்பயிற்சியாக சிலர் கருதுகிறார்கள். ஆனால் யோகா என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல, மனதில் உள்ள சஞ்சலத்தை, பிரம்மையை அகற்றி, மனதிற்கு தெளிவை ஏற்படுத்தவும் யோகா பயன்படுகிறது. நமது கடமையை, செயல்பாட்டை திறமையுடன் அறிவுபூர்வமாக நிறைவு செய்ய பயன்படுவது யோகா.நம்மை கட்டுப்படுத்த உதவுவதுடன் திறமையை வளர்த்துக்கொள்ளவும் உதவுகிறது. நமது நாட்டின் பெருமை மிகுந்த தொன்மையான பண்பாட்டை வெளிப்படுத்தும் யோகா தினம் இன்று(அதாவது நேற்று) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, பிரதமரின் முயற்சியால் 8-வது யோகா தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா செய்வதன் மூலம் அவரவர் மனதையும், உடலையும் நன்கு வைத்துக்கொள்ள முடியும் என்றார்.

சூரியநமஸ்காரம்

இதையடுத்து நடந்த யோகா நிகழ்ச்சியில் மத்திய மந்திரி அன்னபூர்ணா தேவி, திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், உணவு பதன தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மைக்கான தேசிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் லோகநாதன், கிருஷ்ணமாச்சாரியா யோக மந்திரத்தின் யோகாச்சாரியார் ஸ்ரீதரன், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மேற்பார்வையாளர் ராமகிருஷ்ண ரெட்டி மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சூரியநமஸ்காரம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வகையான ஆசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு யோகா செய்வதன் நன்மை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

கோர்ட்டு வளாகத்தில்

தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் தலைமை தாங்கினார்.இதில் நீதிபதிகள் சுந்தர்ராஜன், இந்திராணி, மணி, சிவசக்திவேல் கண்ணன், முருகன், தங்கமணி மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்