கன்னியாகுமரியில் 1000 மாணவ-மாணவிகளுடன் யோகா பயிற்சி - மத்திய மந்திரி மீனாட்சி லேகி பங்கேற்பு
கன்னியாகுமரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகி பங்கேற்றார்.
கன்னியாகுமரி,
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் ஐ.நா. சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. . கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.
இந்தநிலையில் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை யொட்டி நாட்டில் உள்ள முக்கியமான 75 இடங்களில் யோகான தினத்தின் போது பலதரப்பு மக்களும் கூட்டாக பங்கேற்கும் வகையில் இன்று யோகா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது.
அதன்படி, கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற யோகாசன பயிற்சியில் பிரதமர் மோடி மக்களுடன் இணைந்து யோகாசன பயிற்சிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு மத்திய அரசின் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா கடற்கரை வளாகத்தில் யோகாசன நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இந்த யோகாசன நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சார துறை இணை மந்திரி மீனாட்சி லேகி கலந்து கொண்டு யோகாசனம் செய்தார். இந்தநிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உள்பட 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
முன்னதாக அதிகாலை 6 மணிக்கு சூரியன் உதயமாகும் நேரத்தில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் மத்திய மந்திரி மீனாட்சி லேகி, மத்திய தொல்லியல் கலாச்சாரத் துறை அலுவலர்களுடன் யோகாசனம் செய்தார்.