போலீசாருக்கு யோகா பயிற்சி
கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
போலீசார் பணி சுமை காரணமாக அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து மீளும் வகையில் அவர்களுக்கு மாதந்தோறும் உடல் ஆரோக்கியம், மன வலிமை என்ற தலைப்பில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்படி மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆலோசனையின் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் நேற்று போலீசாருக்கான யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் 120 பெண் போலீசார் உள்பட 320 போலீசார் யோகா பயிற்சி பெற்றனர். காலை 6.15 மணிக்கு தொடங்கிய யோகா பயிற்சி 7.45 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த யோகா பயிற்சி தங்களுக்கு மகவும் பயனுள்ளதாக இருந்தது என்று போலீசார் தெரிவித்தனர். இதில் ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் முரளிதரன், உதவி கமிஷனர் சேகர், இன்ஸ்பெக்டர்கள் பிரதாப் சிங், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.