கடும் பனிப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு: செடிகளிலேயே கருகிய செண்டு பூக்கள்: விவசாயிகள் கவலை
உப்புக்கோட்டை பகுதியில் கடும் பனிப்பொழிவால் செடிகளிலேயே செண்டு பூக்கள் கருகின.
உப்புக்கோட்டை, பாலார்பட்டி, குண்டல் நாயக்கன்பட்டி, சீலையம்பட்டி, பூதிப்புரம், வாழையாத்துபட்டி ஆகிய பகுதிகளில் மல்லிகை, முல்லை, சாதிப்பூ, கோழிக் கொண்டை, செண்டுப்பூ உள்ளிட்ட பலவகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைச்சலடையும் பூக்கள் தேனி, சீலையம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது சபரிமலை அய்யப்பன் மற்றும் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இதனால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் தேனி மாவட்டம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் செடிகளிலேயே பூக்கள் கருகி வருவதால் அதன் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பூ சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர் கூறுகையில், நான் ஒரு ஏக்கரில் செண்டு பூக்கள் சாகுபடி செய்துள்ளேன். வழக்கமாக நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 40 முதல் 50 கிலோ பூ கிடைக்கும். தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவால் 5 கிலோ பூக்கள் கிடைப்பதே பெரிதாக தெரிகிறது. 1 கிலோ செண்டு பூ ரூ.50 முதல் 60 வரை விற்பனையாகிறது. ஆனால் விளைச்சல் குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் என்றார்.