'ஏற்காடு எங்கள் பெருமை' நடைபயணம்: அஸ்தம்பட்டி- ஏற்காடு இடையே இன்று போக்குவரத்து மாற்றம்

ஏற்காடு எங்கள் பெருமை என்ற நடைபயணத்தையொட்டி அஸ்தம்பட்டி- ஏற்காடு இடையே இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-22 20:55 GMT

விழிப்புணர்வு நடைபயணம்

'ஏற்காடு எங்கள் பெருமை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைபயணம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் இடமாக ஏற்காடு அமைந்துள்ளது. ஏற்காடு மலைப்பகுதியின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பிளாஸ்டிக் பயன்பாடற்ற, பசுமையான, தூய்மையான ஏற்காட்டை உருவாக்குவது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய திட்டமாக உள்ளது.

இதை நடைமுறைப்படுத்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. அந்தவகையில் 'ஏற்காடு எங்கள் பெருமை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைபயணம் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு ஏற்காடு அடிவாரம் முதலாவது வளைவில் தொடங்குகிறது. தொடர்ந்து 60 அடி பாலம் வரை சென்று மீண்டும் ஏற்காடு அடிவாரத்தில் முடிவடைகிறது.

போக்குவரத்து மாற்றம்

இந்த விழிப்புணர்வு நடைபயணத்தையொட்டி இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை அஸ்தம்பட்டி வழியாக ஏற்காடு செல்லும் அனைத்து வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஏற்காடு- குப்பனூர் சாலையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இதில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ், டி-சர்ட் மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்படும். விருப்பம் உள்ள அனைவரும் இதில் கலந்து கொண்டு பிளாஸ்டிக் இல்லாத ஏற்காட்டை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதில் கலந்து கொள்பவர்கள் ஏதாவது ஒரு அடையாள அட்டை எடுத்து வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வன அலுவலர் காஷியப் ஷஷாங் ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் (தனி) கீதா பிரியா, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ரவிக்குமார் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்