ஏற்காடு பள்ளியில் வன்முறை: மாணவர்களுக்கு நூதன நிபந்தனையுடன் ஐகோர்ட்டு முன்ஜாமீன்

பள்ளிக்கூட கலை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சினையில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் ஒரு வாரம் வகுப்பறைகளை சுத்தம்செய்ய வேண்டும் என்ற நூதன நிபந்தனையுடன் சென்னை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-10-01 18:37 GMT

சென்னை,

ஏற்காடு மான்போர்ட் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் கடந்த ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி நடந்த கலைவிழா நிகழ்ச்சியின்போது, நடனம் ஆடுவதில் 12 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர், இந்த மோதல் மாணவர்கள் விடுதியிலும் தொடர்ந்ததால், பல மாணவர்கள் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீசில் பள்ளி முதல்வர் புகார் அளித்துள்ளார். பின்னர், வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து, ஆகஸ்டு 7-ந்தேதி காலை 9.25 மணிக்கு பள்ளிக்கூடம் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் வாட்ச்மேனை தாக்கி வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்து பலரை தாக்கியுள்ளது.

மதிப்பு சார்ந்த கல்வி

இதில் ஆசிரியர், மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பள்ளி சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன. இதில் ஏற்கனவே இந்த பள்ளியில் படித்து தற்போது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து 13 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தேடப்படும் கல்லூரி மாணவர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மதிப்பு சார்ந்த கல்வி என்பது ஒரு மனிதனின் வாழ்வில் பரிணாமத்தை ஏற்படுத்தும் தன்மை உடையது. இது, பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள்-மாணவர்கள் நேரடி வகுப்பு மூலமாகவே மேன்மை பெருகிறது. இந்த வழி கல்விமுறைதான் எல்லா விதத்திலும் உயர்ந்ததாக உள்ளது. அதேநேரம், ஆன்லைன் கல்விமுறை எல்லா வகையிலும் தோல்வியைத்தான் அடைந்துள்ளது.

காமராஜரின் உன்னத திட்டம்

பள்ளிக்கூடத்தில்தான் அன்பு மற்றும் ஒழுக்கம் சார்ந்த கல்வி மூலம் மாணவர்களின் தனிப்பட்ட ஆளுமைத்தன்மையை வளர்க்க முடியும். இதனால்தான், ஏழை மக்களுக்கும் கல்வியை கொண்டு சேர்த்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர், மாணவர்கள் மத்தியில் பொருளாதார ரீதியில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்பதற்காக சீருடை என்ற உன்னதமான திட்டத்தை கொண்டு வந்தார்.

இத்தனைக்கும் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் பெரிய அளவில் கல்வி கற்கவில்லை. ஆனால், இந்த வழக்கில் பள்ளியில் நடந்த கலை நிகழ்ச்சியில் குத்துபாட்டுக்களை தேர்வு செய்வதில் மாணவர்களிடையே மோதலாக மாறியுள்ளது. பள்ளிக்கூடத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு இதுபோன்ற பாடல்கள் தேவைதானா? இதை பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அந்த பள்ளிக்கூட நிர்வாகிகளின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

சுத்தம் செய்ய வேண்டும்

மனுதாரர்களுக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்குகிறேன். இவர்கள் அனைவரும் மான்போர்ட் பள்ளி முதல்வர் முன்பு ஆஜராக வேண்டும். ஒவ்வொருவரும் தலா ரூ.2 ஆயிரத்தை பள்ளி வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும்.

ஒரு வாரத்துக்கு இந்த பள்ளிக்கூடத்தில் உள்ள வகுப்பு அறைகள், கரும்பலகை, மேஜை, நாற்காலிகளை சுத்தம் செய்ய வேண்டும். அதாவது ஒருவர் குறைந்தது 4 வகுப்பு அறைகளையாவது சுத்தம் செய்யவேண்டும். பள்ளிக்கூடத்தில் உள்ள நூலகத்தில் மகாத்மா காந்தியின் சத்தியசோதனை புத்தகம், ஏழைகளுக்கு எட்டா கனியாக இருந்த கல்வியை எளியமுறையில் அவர்களுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் எப்படி கொண்டு சேர்த்தார்? முன்னாள் ஜனாதிபதியின் கனவு மற்றும் அவரது தொலைநோக்கு பார்வை குறித்தும் படிக்க வேண்டும்.

அறிக்கை

பின்னர், அதுகுறித்து குறைந்தது 4 பக்கங்களுக்கு கையால் எழுதி பள்ளி முதல்வரிடம் சமர்பிக்க வேண்டும். இவற்றின் அடிப்படையில் பள்ளி முதல்வர் இந்த ஐகோர்ட்டுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்