மாசற்ற சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை
மாசற்ற சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அந்த பேரணியில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்டோருடன் கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோரும் சைக்கிள் ஓட்டியபடி பேரணியில் பங்கேற்று பொதுமக்களிடம், பிளாஸ்டிக் என்பது அழகானது, வீசி எறிந்தால் ஆபத்தானது, துணிப்பையை அளிப்போம், பிளாஸ்டிக் பையை தவிர்ப்போம், எரிக்காதே, எரிக்காதே பிளாஸ்டிக்கை எரிக்காதே உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாசற்ற சுற்றுச்சூழல்
இப்பேரணியானது கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இருந்து தொடங்கி நான்குமுனை சந்திப்பு வரை சென்று மீண்டும் அரசு சட்டக்கல்லூரி வரை சென்று கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் முடிவடைந்தது. முன்னதாக கலெக்டர் மோகன் பேசுகையில், வருங்கால சந்ததியினருக்கு மாசற்ற சுற்றுச்சூழல் அமைப்பினை விட்டுச்செல்வது நமது அனைவரின் கடமையாகும். எனவே சுகாதாரமான சுற்றுச்சூழல் அமைப்பினை உருவாக்கிடும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம். பிளாஸ்டிக் பையை தவிர்த்து அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் காமராஜ், உதவி பொறியாளர் கார்த்திக், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.