நூல் விலை கிலோவுக்கு ரூ.25 குறைந்ததால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.25 குறைந்ததால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2023-07-01 18:04 GMT

பின்னலாடை தொழில்

பின்னலாடை தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது. திருப்பூரில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வந்தனர். நூல் விலையை பொறுத்தே ஆர்டர்களை ஒப்பந்தம் செய்து மொத்தமாக நூல் வாங்கி பின்னலாடை உற்பத்தி செய்கிறார்கள்.

நூல் விலை ஏற்ற, இறக்கம் காரணமாக பனியன் தொழில் மந்தநிலையை சந்தித்து வந்தது. அபரிமிதமான நூல் விலையேற்றத்தால் பனியன் தொழில் கடந்த ஒரு வருடமாக முடங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது. அதன்பிறகு கடந்த 5 மாதமாக நூல் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. இதன் காரணமாக பின்னலாடை ஆர்டர்கள் மெல்ல மெல்ல வரத்தொடங்கியது.

கிலோவுக்கு ரூ.25 குறைந்தது

குறிப்பாக ஏற்றுமதி நிறுவனங்களுக்கான ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளது. இதனால் ஏற்றுமதி நிறுவனங்களில் பனியன் உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்களுக்கான ஆர்டர் வருகை போதுமானதாக இல்லை. இதன் காரணமாக ஜாப்ஒர்க் நிறுவனங்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் இந்த மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் நேற்று அறிவித்தன. அதன்படி 30-ம் நம்பர் நூல் வரை கடந்த மாதத்தை விட கிலோவுக்கு ரூ.20 குறைந்துள்ளது. 34-ம் நம்பர், 40-ம் நம்பர் நூல் விலை கிலோவுக்கு ரூ.25 வரை குறைந்துள்ளது.

நூல் விலை விவரம்

அதன்படி கோம்டு ரகம் ஒரு கிலோ 10-ம் நம்பர் ரூ.165-க்கும், 16-ம் நம்பர் ரூ.175-க்கும், 20-ம் நம்பர் ரூ.233-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.255-க்கும், 34-ம் நம்பர் ரூ.270-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும் விற்பனை செய்யப்பட்டது. செமி கோம்டு ரகத்தில் 20-ம் நம்பர் ரூ.225-க்கும், 24-நம் நம்பர் ரூ.245-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ.260-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனையானது.

நூல் விலை குறைந்துள்ளதால் ஆர்டர்களை தைரியமாக எடுத்துச்செய்ய முடியும் என்று உள்நாட்டு, வெளிநாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மந்தநிலையை போக்கி, மீண்டும் பனியன் உற்பத்தி எழுச்சி பெறும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்