பழனி முருகன் கோவிலில் யாகசாலை அமைக்கும் பணி

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-01-16 19:18 GMT

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தத்ரூப ஓவியம்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையொட்டி கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கும்பாபிஷேகத்திற்காக, கடந்த மாதம் 25-ந்தேதி பழனி மலைக்கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

இந்தநிலையில் கும்பாபிஷேகத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் கோவிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோபுரங்களில் வர்ணம் பூசும் பணிகள் முடிந்துவிட்டது. மேலும் கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் முருகப்பெருமானின் சிறப்பை விளக்கும் வகையிலான ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்றது. மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தின் மேல் பகுதியில் முருகனின் ராஜா அலங்கார ஓவியம் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.

யாகசாலை பணிகள்

இதுதவிர கோபுர கலசம், தங்கக்கவசம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் செப்பனிட்டு, அதில் 'தங்க ரேக்' ஒட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், கோவில் ராஜகோபுர கலசங்கள், தங்கமயில் வாகனம் ஆகியவற்றுக்கு 'தங்க ரேக்' ஒட்டும் பணிகள் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது. வருகிற 23-ந்தேதி மாலை முதல்கால யாகசாலை பூஜை தொடங்குகிறது.

இதற்காக, மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பழனியில் கும்பாபிஷேகத்துக்கான அனைத்து திருப்பணிகளும் இரவும், பகலுமாக நடைபெற்று வருவதால் தற்போது கோவில் வண்ணமயமாகி புதுப்பொலிவு பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்