ஒருங்கிணைந்த குடிமைப்பணிக்கான எழுத்து தேர்வு

நெல்லையில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிக்கான எழுத்து தேர்வு 34 மையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

Update: 2023-01-25 20:04 GMT

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-3ஏ பதவிக்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலையில் நடக்கிறது. இதற்காக நெல்லை, பாளையங்கோட்டை தாலுகாக்களில் பழையபேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரி, பேட்டை காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி, காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி, ரோஸ்மேரி மெட்ரிகுலேசன் பள்ளி, ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிகுலேசன் பள்ளி, மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மேல்நிலைப்பள்ளி, மேரி சார்ஜென்ட் மேல்நிலைப்பள்ளி, சாராள்தக்கர் கல்லூரி, சாரதா கல்லூரி உள்ளிட்ட 28 இடங்களில் 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 9,343 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு பணிகளை மேற்கொள்ள துணை தாசில்தார் நிலையில் 12 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தேர்வு மைய நடவடிக்கைகளை பதிவு செய்யும் வகையில் 35 வீடியோகிராபர்களும், தேர்வை கண்காணிக்க 34 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். மேலும் தேர்வு நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்கவும், கூடுதல் பஸ்கள் இயக்கவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தேர்வு அறையினுள் செல்போன் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. மேலும் தேர்வர்களை தவிர மற்றவர்களுக்கு தேர்வு மையத்தில் அனுமதி கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்