ஈரோடு மாவட்டத்தில் 3 மையங்களில் நடந்தது சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு

ஈரோடு மாவட்டத்தில் 3 மையங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பார்வையிட்டார்.

Update: 2022-06-25 21:54 GMT

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 3 மையங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பார்வையிட்டார்.

சப்-இன்ஸ்பெக்டர் பணி

தமிழகத்தில் காலியாக உள்ள 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பாணை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து பட்டதாரிகள் ஆண்கள், பெண்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தனர். இதில் போலீஸ் துறையில் பணிபுரிபவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்காக 3 ஆயிரத்து 610 ஆண்கள், 815 பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 428 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். மேலும் போலீஸ் துறையில் பணி புரியும் 447 ஆண் போலீசார், 108 பெண் போலீசார் என 607 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு முறைப்படி ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு, நேற்று காலை எழுத்து தேர்வு நடந்தது.

தீவிர சோதனை

ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் மகளிர் கல்லூரி, கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி, நந்தா என்ஜினீயரிங் கல்லூரி என 3 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது. இதற்காக நேற்று காலை 7 மணி முதல் தேர்வு மையங்களின் முன்பகுதியில் தேர்வு எழுதுவதற்காக ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களை போலீசார் தீவிர சோதனைக்கு பின்னர் தேர்வு மையங்களுக்குள் அனுமதித்தனர்.

அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கால்குலேட்டர்கள் மற்றும் செல்போன் உள்ளிட்ட எந்த ஒரு பொருட்களும் தேர்வு மையத்துக்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பொது அறிவு தேர்வு

வேளாளர் கல்லூரியில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று (அதாவது நேற்று) தொடங்கி நடந்து வருகிறது. காலையில் நடந்த பொது அறிவு தேர்வை பொதுப்பிரிவினரும், மதியம் நடந்த தமிழ் திறனறிதல் தேர்வை பொதுப்பிரிவினர் மற்றும் ஏற்கனவே போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாரும் எழுதினர். இந்த தேர்வுக்காக 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 70 சப்-இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நாளை (அதாவது இன்று) நடைபெற உள்ள பொது அறிவு தேர்வை போலீசார் மட்டும் எழுதுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்