பனமரத்துப்பட்டி:-
சேலம் நிலவாரப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி அடக்கினர். மாடுகள் முட்டியதில் 60 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நிலவாரப்பட்டியில் நேற்று மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி 2-வது முறையாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. 350-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியை மாடுபிடி வீரர்கள் வாசித்து ஏற்று கொண்டனர். மேலும் 108 ஆம்புலன்ஸ், பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தன.
கலெக்டா தொடங்கி வைத்தார்
முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் ஒரு சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன. ஆனால் பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து ஓடி விட்டன.
60 பேர் காயம்
வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்த நிலையிலும் களத்தில் நின்ற பல காளைகள் தன்னை அடக்க வந்த வீரர்களிடம் போக்கு காட்டின. போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், கட்டில், தங்கக்காசு, வெள்ளிக்காசு உள்பட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 60-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 8 பேர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே கோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஜல்லிக்கட்டு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டையொட்டி சேலம் ரூரல் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.