சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்

திண்டுக்கல் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினர். மாடுகள் முட்டியதில் 25 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-02-15 16:16 GMT

 ஜல்லிக்கட்டு

திண்டுக்கல் அருகே உள்ள மடூர் ஊராட்சி புகையிலைபட்டியில் புனித செபஸ்தியார் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது.

முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்க திண்டுக்கல், திருச்சி, மதுரை, பாலமேடு, நத்தம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 490 காளைகள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த காளைகளை, திண்டுக்கல் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் திருவள்ளுவன் தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்தனர். மொத்தம் 483 காளைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் 7 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மீதமுள்ள 476 காளைகள் களம் இறக்க அனுமதிக்கப்பட்டன. இதேபோல் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காளைகளை அடக்க 214 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மல்லுக்கட்டிய வீரர்கள்

இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடங்கியது. திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார், கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அந்த காளைகளை யாரும் பிடிக்கவில்லை.

அதன்பிறகு கிராமத்து காளைகள் மற்றும் வெளியூர் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளுடன், மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர்.

ஒரு சுற்றுக்கு 25 பேர் வீதம் மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். சில காளைகள், மாடுபிடி வீரர்களை சிதறி ஓட செய்தது. மாடுபிடி வீரர்களை கொம்புகளால் முட்டி தூக்கி பந்தாடியது. சில காளைகள் தரையோடு தரையாக போட்டு புரட்டி எடுத்தது.

இதேபோல் திமிறிய காளைகளின் திமிலை பிடித்து மாடுபிடி வீரர்கள் அடக்கி தங்களது வீரத்தை நிரூபித்தனர். காளைகளும், மாடுபிடி வீரர்களும் களத்தில் மல்லுக்கட்டிய காட்சியை கண்ட பார்வையாளர்கள் விசில் அடித்தும், கைகளை தட்டியும் உற்சாகப்படுத்தினர்.

கட்டில், பீரோ

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளிக்காசு, கட்டில், குக்கர், சைக்கிள், பீரோ, எவர்சில்வர் அண்டாக்கள், கிப்ட் பாக்ஸ், ெகடிகாரம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 2 மணி வரை நடந்தது. இதில் சுமார் 20 நிமிடங்கள் ஜல்லிக்கட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. அதாவது காளைகளுடன் வந்த சிலர், மாடுபிடி வீரர்களுக்கு இடையூறு செய்தனர். பார்வையாளர்கள் சிலரும் ஜல்லிக்கட்டு களத்துக்குள் புகுந்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.

25 பேர் காயம்

சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என 25 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு கொசவபட்டி வட்டார மருத்துவர் அசோக்குமார் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இதில் புகையிலைபட்டியை சேர்ந்த அகஸ்டின் (வயது 21), இன்பராஜ் (28), டேனியல் (26), நெய்க்காரப்பட்டியை சேர்ந்த கிரிதரன் (21), முளையூரை சேர்ந்த சின்னு (28), பாலமேட்டை சேர்ந்த கோகுல்ராஜா (22), செட்டியபட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி (23) ஆகிய 7 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை புகையிலைபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சந்தானமேரிகீதா, மடூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெர்மன்சாந்தி, மடூர் கூட்டுறவு சங்க தலைவர் தாஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கம்மங்கூழ் கடையில் ரூ.500 திருட்டு

ஜல்லிக்கட்டு நடந்ததையொட்டி புகையிலைபட்டியில் தற்காலிக குளிர்பான கடைகள், சிற்றுண்டி கடைகள் போடப்பட்டிருந்தன. அதன்படி 50 வயது பெண் ஒருவர், கடை அமைத்து கம்மங்கூழ் விற்பனையில் ஈடுபட்டிருந்தார். விற்பனையான பணத்தை அவர் ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் வைத்திருந்தார். இந்தநிலையில் கடையில் கூழ் வாங்கி குடித்த வாலிபர் ஒருவர், டப்பாவில் இருந்த ரூ.500 நைசாக திருடி சென்று விட்டார். நாள் முழுவதும் கூழ் விற்ற பணம் திருடப்பட்டதால் அந்த பெண் புலம்பி தவித்தது அங்கிருந்தவர்களை வேதனையில் ஆழ்த்தியது.

களத்தில் புகுந்த கிடா-நாய்

கிராமப்புறங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை, தங்களது குழந்தைகளை போல பாவித்து வளர்த்து வருகின்றனர். சில வீடுகளில் காளைகளுடன் இணை பிரியாத நண்பர்களாக அங்கு வளர்க்கப்படுகிற ஆடுகளும், நாய்களும் மாறி விடுகின்றன. காளைகள் மீதான பாசத்தில் எங்கு சென்றாலும் அதனுடன் சேர்ந்து நாய், ஆடுகள் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த காட்சியை ஜல்லிக்கட்டு களத்திலும் நேற்று பார்க்க முடிந்தது. மிரட்டிய முரட்டு காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி கொண்டிருந்தனர். அப்போது, வாடிவாசல் வழியாக செம்மறி ஆட்டு கிடா ஒன்று, தன்னுடன் வளர்ந்த காளையுடன் வந்து களத்துக்குள் புகுந்தது. என் நண்பனை தொட வேண்டுமானால், என்னை தாண்டி தான் செல்ல வேண்டும் என்பது போல காளையின் அருகே நின்று கொண்டிருந்தது அந்த கிடா. இதேபோல் மற்றொரு காளையுடன் நாய் ஒன்று வந்து, என்னையும் அடக்கி பாருங்கள் என்று மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடுவது போல இருந்தது. காளைக்கும், காளையர்களுக்கும் இடையே பலத்தை நிரூபிக்கும் களம் என்பதை அறியாத அந்த நாயும், கிடாவும் பாசப்பிணைப்பில் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

--------

Tags:    

மேலும் செய்திகள்