தக்காளி விலை சரியுமா?

தக்காளி விலை சரியுமா? சாகுபடி பரப்பை கண்காணிக்க விவசாயிகள் கோரிக்கை

Update: 2023-08-03 14:22 GMT

போடிப்பட்டி,

தக்காளி விலை கடும் சரிவை சந்திக்கும் நிலையை தவிர்க்க, சாகுபடி பரப்பை கண்காணித்து, கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலிவு விலை

சமீப காலங்களாக தக்காளி என்பது மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. தக்காளி விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளி வழங்குகிறது. தக்காளிக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் தற்போது பல விவசாயிகள் தக்காளி சாகுபடியில் இறங்கியுள்ளனர். இதனால் விரைவில் தக்காளி வரத்து தாறுமாறாக அதிகரித்து, அதலபாதாளத்துக்கு விலை சரியும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே தக்காளி சாகுபடிப் பரப்பை கண்காணித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தக்காளி குறித்த மீம்ஸ்கள் மற்றும் துணுக்குகள் சமூக வலைத்தளங்களில் களை கட்டுகிறது.மேலும் தக்காளி விற்று கோடீஸ்வரனான விவசாயி...ஒரே நாளில் பல லட்சங்களுக்கு தக்காளி விற்ற விவசாயி என்பன போன்ற பல செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது.ஆனால் தக்காளி சாகுபடி செய்து கடனாளி ஆன பல ஆயிரக்கணக்கான விவசாயிகளை எல்லோருமே மறந்து விட்டார்கள்.

உரிய விலை

கடந்த சில மாதங்களுக்கு முன் தக்காளியின் நிலை என்ன? சுமார் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளியை ரூ. 50-க்கு விற்பனை செய்து விட்டு பறி கூலிக்கு யாரிடம் கடன் வாங்குவது என்ற வேதனையோடு கண்கள் கலங்க வீடு திரும்பிய விவசாயிகள் எவ்வளவு பேர் தெரியுமா? அதே வேகத்தில் டிராக்டரை விட்டு தக்காளி செடிகளை ஒட்டு மொத்தமாக உழுது அழித்த விவசாயிகளின் எண்ணிக்கை நம்மிடம் இருக்கிறதா?..விலை உயர்வு என்பது படிப்படியானதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய தாறுமாறான விலை உயர்வு என்பது ஒருசில விவசாயிகளுக்கு சந்தோஷம் அளிக்கலாமே தவிர விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு தருவதாக அமையாது. இனிவரும் காலங்களில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய விலை உயர்வு சாகுபடிப் பரப்பு குறைந்ததால் ஏற்பட்டதல்ல என்பதை உணராமல் சாகுபடிப்பரப்பை அதிகரிப்பது ஆபத்தானதாகும்.

விவசாயிகள் ஆர்வம்

தமிழகம் முழுவதும் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர ஆந்திரா, கர்நாடகா பகுதிகளிலிருந்தும் தக்காளி கொண்டு வரப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட மகசூல் குறைவே தற்போதைய விலை உயர்வுக்கு காரணமாகும். அதாவது 40 பெட்டி தக்காளி பறிக்க வேண்டிய தோட்டத்தில் வெறும் 4 பெட்டி கூட கிடைக்காத நிலை உள்ளது. ஆனால் தமிழகத்தில் மேலும் 7500 ஏக்கர் தக்காளி சாகுபடியை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. தக்காளியில் ஜாக்பாட் அடிக்கும் ஆசையில் விவசாயிகளும் ஆர்வமுடன் தக்காளி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே தக்காளி சாகுபடிப் பரப்பை அரசு கண்காணிக்க வேண்டும்.

ஏற்கனவே ஆண்டுதோறும் தக்காளி சாகுபடியில் எப்போதாவது வரும் தாறுமாறு விலை உயர்வைத் தவிர உரிய விலை கிடைக்காத நிலையே உள்ளது.சாகுபடிப் பரப்பு அதிகரித்தால் தக்காளி விலை மீண்டும் மிகப் பெரிய சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது.சாலை ஓரங்களில் தக்காளியை கொட்டிச் செல்லும் அவலம் மீண்டும் ஏற்படாமல் தடுக்க முழுமையான திட்டமிடுதல் அவசியமாகும்.எப்போதாவது ஒருமுறை தக்காளி கிலோ ரூ. 140 க்கு விற்பதை விட எப்போதும் கிலோ ரூ. 40-க்கு விற்றால் போதும் என்பதே அனைத்து விவசாயிகளின் எண்ணமாக உள்ளது.

----------------

Tags:    

மேலும் செய்திகள்