பகவதி அம்மனுக்கு ஆராட்டு

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நடைபெற்றது.

Update: 2023-08-17 18:45 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நடைபெற்றது.

ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், நிர்மால்ய பூஜை, அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனை, உஷ பூஜை, ஸ்ரீபலி பூஜை, நிவேத்ய பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடந்தது. பின்னர் 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வழி நெடுகிலும் தேங்காய் பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர். அதனைதொடர்ந்து இரவு 11 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும், வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி, அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்