உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை: சுவாமிமலையில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைப்பு

‘ஜி-20’ மாநாட்டு அரங்க முகப்பில் நிறுவப்பட உள்ள உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை சுவாமிமலையில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2023-08-26 00:02 GMT

தஞ்சாவூர்,

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் அடுத்த மாதம்(செப்டம்பர்) 9-ந் தேதி, 10-ந் தேதி ஆகிய 2 நாட்கள் 'ஜி-20' மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டு அரங்கத்தின் முகப்பு பகுதியில் மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் உலகிலேயே மிகப்பெரிய அளவிலான நடராஜர் சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் உள்ள தேவசேனாதிபதி சிற்பக்கூட ஸ்தபதிகள் ராதாகிருஷ்ணன், ஸ்ரீகண்டன், சுவாமிநாதன் உள்ளிட்டோர் நடராஜர் சிலையை வடிவமைத்தனர்.

மலர்தூவினர்

இந்த சிலையை நேற்று இந்திரா காந்தி தேசிய கலை மைய தலைவர் ஆர்த்தல் பாண்டியா தலைமையில், மைய அலுவலர்கள் ஜவகர் பிரசாத், மனோகன் தீட்சத் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து சிலை டெல்லிக்கு கண்டெய்னர் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது.

உலகத்திலேயே மிகப்பெரிய அளவிலான நடராஜர் சிலை சுவாமிமலையில் இருந்து டெல்லிக்கு செல்வதை அறிந்த பொதுமக்கள், சாலைகளின் இருபுறங்களிலும் திரண்டு நின்று மலர் தூவி வழியனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ஸ்தபதிகள் கூறியதாவது:-

டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உலோகத்தால் ஆன நடராஜர் சிலை சோழர் கால முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் 'ஜி-20' மாநாட்டு முகப்பில் இந்த சிலை நிறுவப்பட உள்ளது.

ரூ.10 கோடி மதிப்பு

சிலையில் மீதமுள்ள 25 சதவீத பணிகளை மேற்கொள்ள இங்கிருந்து 15-க்கும் மேற்பட்ட ஸ்தபதிகள் டெல்லி செல்கிறார்கள். அங்கு சிலை முழுமையாக வடிவமைக்கப்பட்டு நிறுவப்படும். இந்த நடராஜர் சிலை 28 அடி உயரம், 21 அடி அகலம் கொண்டது.

25 டன் எடை உள்ள இந்த சிலை ரூ.10 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே இந்த சிலை தான் மிகப்பெரியது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்