ஓ.பன்னீர் செல்வத்திற்கு உலக சமாதான விருது

ஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரி 51 சக்தி பீட கோவிலில் உலக சமாதான தெய்வீக பேரவை சார்பில் 20-ம் ஆண்டு உலக சமாதான பெருவிழா நடைபெற்றது.

Update: 2022-12-04 10:56 GMT

கோவை,

கோவை ஒண்டிப்புதூர் அருகே காமாட்சிபுரி 51 சக்தி பீட கோவில் உள்ளது. இதன் ஆதீனமாக காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உள்ளார். இந்தக் கோவிலில் உலக சமாதான தெய்வீக பேரவை சார்பில் 20-ம் ஆண்டு உலக சமாதான பெருவிழா நடைபெற்றது.

இதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,

நான் இந்த கோவிலுக்கு பலமுறை வருவதாக காமாட்சிபுரி ஆதீனத்திடம் கூறியுள்ளேன். ஆனால் என்னால் வர முடியவில்லை. இன்று நான் வந்துள்ளேன். இதனை நான் பாக்கியமாக நினைக்கிறேன். உலக சமாதானத்திற்காக தெய்வீக பணியை செய்து வரும் ஒரே ஆதீனம் காமாட்சிபுரி ஆதீனம். சமத்துவம், சமாதானம், ஜாதி, மதம் கடந்து மக்கள் நலனுக்காக அவர் வாழ்ந்து வருகிறார்.

உலக சக்திகளை ஒரே இடத்தில் உருவாக்கி உலக மக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆரோக்கியத்தை வழங்கி வருகிறார். இதனை நான் பாராட்டுகிறேன். இந்த நிகழ்ச்சியில் வந்து உங்களை சந்திப்பதை பாக்கியமாக கருதுகிறேன். இதேபோன்று பிரதமரும், காமாட்சிபுரி ஆதீனம் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து விவசாயிகளுக்காக போராடி வருகிறார். அவர்களின் துன்பங்களை நீக்க பணியாற்றி வருகிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, செல்லமுத்து மீது அன்பு வைத்திருந்தனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு உலக சமாதான விருது வழங்கப்பட்டது. பின்னர் கோவில் சீடர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்