உலக கைம்பெண்கள் தின எழுச்சி மாநாடு
செம்பனார்கோவிலில் உலக கைம்பெண்கள் தின எழுச்சி மாநாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பொட்டு வைத்து பூச்சூடி கொண்டனர்.
பொறையாறு:
செம்பனார்கோவிலில் உலக கைம்பெண்கள் தின எழுச்சி மாநாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பொட்டு வைத்து பூச்சூடி கொண்டனர்.
கைம்பெண்கள் தினம்
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கைம்பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் கணவனை இழந்த பெண்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கம், நாகை மாவட்ட விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம், தரங்கம்பாடி திலகம் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம் சார்பில் உலக கைம்பெண்கள் தின எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது.
மாநாட்டுக்கு நாகை மாவட்ட விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்க தலைவர் கஸ்தூரி தலைமை தாங்கினார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் வேல்முருகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், பீஸ் ஃபவுண்டேஷன் இயக்குனர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் கைம்பெண்கள் மற்றும் தமிழ் நாடு அரசு ஆதரவற்ற மகளிர் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினர் செல்வி, வசந்தி, ரேணுகா தேவி ஆகியோர் பேசினர்.
சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன்
திருமணத்துக்கு முன்பே பெண்கள் பூவும், பொட்டும் வைத்துக் கொள்கின்றனர். அதனால் கணவனை இழந்த பின்பு அவற்றை துறக்கத் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாநாட்டு அரங்கம் மற்றும் வாயிலில் பொட்டு மற்றும் பூக்கள் வைக்கப்பட்டிருந்தன. நிகழ்வில் பங்கேற்றோர் அவற்றை தாமாக எடுத்து சூடிக்கொண்டனர். இம்மாநாட்டில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைத்து 10 மாதங்கள் ஆகின்றன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைம்பெண்களுக்கான உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். கைம்பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் சுழல் நிதி கடன் குறைந்த வட்டியில் வழங்க வேண்டும். அரசு மற்றும் கோவில் நிலங்களில் கூட்டு வேளாண்மை செய்ய கைம்பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு சிறு குத்தகைக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட கைம்பெண்கள் கலந்து கொண்டனர்.