உலக பிரசித்த பெற்ற சித்திரை திருவிழா- மாசி வீதிகளில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர்- பக்தர்கள் வெள்ளத்தில் சித்திரை திருவிழா தேரோட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது.

Update: 2023-05-03 20:22 GMT


மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது.

மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டம்

இந்த ஆண்டுக்கான மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் காலை வெகுவிமரிசையாக நடந்தது.

நேற்று மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டம் நடந்தது. இதற்காக வண்ணத் துணிகளாலும், மலர்களாலும் தேர்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு தேரின் முன்புறமும் பிரம்மத்தேவர் அமர்ந்து நான்கு குதிரைகளுடன் தேரை ஓட்டிச் செல்வது போன்று சிலைகள் அமைக்கப்பட்டு இருந்தன. தேரின் உள்பகுதியில் வீற்றிருந்த சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு தெளிவாக தெரியும் வண்ணம் பளிச்சிடும் மின்விளக்குகளும் பொருத்தப்பட்டு இருந்தன.

வடம் பிடித்த பக்தர்கள்

தேரோட்டத்தையொட்டி மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் அதிகாலையில் கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து கீழமாசி வீதியில் உள்ள தேரடி மண்டபத்திற்கு வந்தனர். அங்கு உள்ள கருப்பணசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பெரிய தேரில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினர். சிறிய தேரில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார்.

தேரோட்டத்தை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாசிவீதிகளில் குவிந்திருந்தனர்.

சரியாக காலை 6.33 மணிக்கு பக்தர்கள் "ஹரகர சுந்தர மகாதேவா" என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் இருந்த பெரிய தேர் நகர்ந்தது. சிறிது நேரம் கழித்து 6.50 மணிக்கு மீனாட்சி அமர்ந்திருந்த சிறிய தேர் புறப்பட்டது. தேர்களை பக்தர்கள் மகிழ்ச்சி ெபாங்க ஆரவாரத்துடன் இழுத்தனர்.

தேர்களுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானை, 'டங்கா' மாடு ஆகியவை அணிவகுத்துச் சென்றன. தொடர்ந்து விநாயகரும், முருகனும் சிறிய சப்பரங்களில் சென்றனர்.

மாசி வீதிகளில் வலம்

சிவனடியார்கள் சங்கொலி முழங்க, மேளதாளங்கள் இசைக்க பக்தர்கள் "ஹரகர சுந்தர மகாதேவா", "சம்போ சங்கர மகாதேவா", "மீனாட்சி சுந்தர மகாதேவா", "எல்லோரும் இழுக்கணும் மகாதேவா" என்ற கோஷங்களை எழுப்பினார்கள்.

தேர்கள், கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதிகளில் வலம் வந்தன. இது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது.

சுவாமி-அம்மனின் திருக்கல்யாண கோலத்தை தரிசிக்க இயலாத பக்தர்கள் தேரோட்டத்தைக்கண்டு பரவசம் அடைந்தனர்.

தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி சுவாமி தரிசனம் செய்தனர்.

பெரியதேர் மதியம் 12.35 மணிக்கு நிலையை அடைந்தது. அதேபோல சிறியதேர் 12.55 மணிக்கு நிலைக்கு வந்தது.

இன்றுடன் நிறைவு

தேரோட்டத்தையடுத்து, நேற்று இரவு தேர்ச்சக்கரம் தடம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் சப்தாவர்ண சப்பரத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர்.

மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் ஒரே சப்பரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இந்த ஒரு நாளில் மட்டும்தான். எனவே இதை பக்தர்கள் குடும்பம்-குடும்பமாக கண்டு தரிசனம் செய்தனர்.

இன்று (4-ந்தேதி) கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தவாரியும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றன. மாலையில் ரிஷப வாகனங்களில் அம்மனும், சுந்தரேசுவரரும் மாசிவீதிகளில் வலம் வருகின்றனர்.

பலத்த பாதுகாப்பு

நேற்றைய நிகழ்ச்சியின்போது தேர்களுக்கு பின்னாலேயே ஆம்புலன்சு, தீயணைப்பு வண்டிகள், போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. தேரோட்டம் காரணமாக மாசிவீதிகள், ஆவணி மூலவீதிகளில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை.

தேரோட்ட நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர், கோவில் துணை கமிஷனர் அருணாசலம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர்.

மதுரை புறப்பட்ட கள்ளழகர்

இதற்கிடையே மதுரை அழகர்கோவிலில் சித்திரைத்திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்துவருகிறது.. இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது சிகர நிகழ்ச்சியாகும்.

இந்த நிகழ்ச்சிக்காக நேற்று மாலை 5.50 மணிக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். அப்போது மழை பெய்தது. கொட்டும் மழையிலும் அழகரை காண அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

மாலை 6 மணி அளவில் அங்குள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது நூபுர கங்கை தீர்த்த அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடந்தன.

6.50 மணி அளவில் கண்டாங்கி பட்டு உடுத்தி, நெற்றி பட்டை, கரங்களில் வளைதடி, நேரிக்கம்பு, பரிவாரத்துடன் மேள, தாளம் முழங்க கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். அப்போது, வானில் இருந்து பூக்கள் தூவுவது போல் வானில் இருந்து மழை பொழிந்தது. விரதம் இருந்துவரும் பக்தர்கள் சாமி ஆடிக்கொண்டு அழகருடன் வந்தனர். வழி நெடுக உள்ள மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வைகையில் இறங்குகிறார்

இன்று (4-ந்தேதி) மூன்று மாவடியில், மதுரை மக்கள் அழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர் சேவை நடக்கிறது. தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் அவர், இரவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலை அடைகிறார். விடிய, விடிய அழகருக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடக்கிறது.

நாளை (வௌ்ளிக்கிழமை) அதிகாலையில் 5.45 மணிக்கு கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வீற்றிருந்து வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அப்போது பல லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து மும்முரமாக செய்துவருகிறார்கள்.

கள்ளழகர் விழாவுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சாப விமோசனம்

6-ந்தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் அழகர் காட்சி தருகிறார். தொடர்ந்து அன்று மாலையில் கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு விடிய விடிய தசாவதார காட்சி நடைபெறும். 7-ந் தேதி மதியம் ராஜாங்க திருக்கோலத்தில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அன்று இரவு பூப்பல்லக்கு விழா நடக்கிறது.

கள்ளழகர் புறப்பாடு நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், கோவில் தக்கார் வெங்கடாசலம், வெங்கடேசன் எம்.பி., எம் எல்.ஏ.க்கள் ஆர்.பி.உதயகுமார், வெங்கடேசன், ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், பூமிநாதன், அறநிலையத்துறை இணை கமிஷனர்கள் செல்லத்துரை, பாரதி, துணை கமிஷனர் ராமசாமி, வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் புலிகேசி சண்முகராஜபாண்டியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்