விவசாயிகளுக்கான பணிமனை நிகழ்ச்சி

விவசாயிகளுக்கான பணிமனை நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்

Update: 2023-05-10 18:45 GMT

சிவகங்கை,

விவசாயிகளுக்கான பணிமனை நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

பணிமனை நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்ட, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமாக்கல் திட்டம் நிலை II-ன் கீழ், விவசாயிகளுக்கான வர்த்தக தொடர்பு குறித்த இடைமுக பணிமனை நிகழ்ச்சி சிவகங்கையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மதசூதன்ரெட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:- மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் நிலை II-ன் கீழ், உப்பாறு உபவடி நிலப்பகுதியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் விவசாயிகள் பங்கேற்கும் 2 நாட்கள் இடைமுக பணிமனை நிகழ்ச்சி நடக்கிறது.

விவசாயிகள் வேளாண் பொருட்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்வது மட்டுமின்றி, எளியமுறையில் அதனை விற்பனை செய்வதற்கு, பயனுள்ள வகையில், வர்த்தகம் செய்வது தொடர்பாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வேளாண் எந்திரங்கள்

மேலும், உப்பாறு உபவடி நிலப்பகுதியில் வேளாண் வணிகத்துறையின் மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உப்பாறு சிவகங்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் இதுவரை ரூ.64 லட்சம் மதிப்பில் 336 டன் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்து வணிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.4 லட்சம் மதிப்பில் நெல் மற்றும் தற்பூசணி விதை விற்பனையும், ரூ.1 லட்சம் மதிப்பில் கால்நடை தீவனம் விற்பனையும் செய்யப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிதி உதவியுடன் வேளாண் வணிகத்துறையின் மூலம் வழங்கப்பட்ட ரூ.20 லட்சம் உற்பத்தி மூலதன மானிய நிதியில், மிளகாய் உடைக்கும் மற்றும் மிளகாய் பொடி அரவை எந்திரம், சிறுதானியங்கள் மற்றும் கால்நடை தீவன அரவை எந்திரங்கள் பெறப்பட்டு இடையமேலூரில் உள்ள நிறுவனத்தின் மதிப்புகூட்டு எந்திர மைய கட்டிடத்தில் நிறுவப்பட்டு உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.

கையேடு

வணிக விரிவாக்க மானிய நிதி ரூ.30 லட்சத்தில் மரச்செக்கு எந்திரம், கால்நடை தீவன அரவை எந்திரம், கைக்குத்தல் அரிசி அரவை எந்திரம், வைக்கோல் கட்டும் எந்திரம் மற்றும் குழி எடுக்கும் எந்திரம் விவசாயிகளின் பயன்பாட்டிற்கென உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு துறைரீதியான திட்ட விளக்க கையேட்டினை கலெக்டர் வெளியிட்டார். இதில், இணை இயக்குனர் (வேளாண்மைத்துறை) தனபாலன், துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) தமிழ்செல்வி, ஏற்றுமதி மேம்பாட்டு மையத் துணைத்தலைவர் ராஜமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்