கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திஎன்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் நீதி கேட்டு பேரணி
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் நீதி கேட்டு பேரணி நடத்தினர்.
மந்தாரக்குப்பம்,
நெய்வேலி என்.எல்.சி. நிறுவன சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேலைக்கு தகுந்தார் போல் பணி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் நெய்வேலி பெரியார் சதுக்கத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு என்.எல்.சி. தலைமை அலுவலகம் வரை நீதி கேட்டு பேரணியாக சென்றனர். பின்னர் அவர்கள் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க சென்றனர். ஆனால் தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால் மனு அளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இது குறித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கூறும்போது, என்.எல்.சி. நிறுவனம் எங்களை மதிக்கவில்லை. அதனால் அடுத்த மாதம் நோட்டீஸ் வழங்கி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.