ஊதியத்தில் பிடித்த தொகையை கடன் சங்கத்தில் கட்டாததால் அதிர்ச்சி:பேரூராட்சி அலுவலக கதவை இழுத்து பூட்டி தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்விக்கிரவாண்டியில் பரபரப்பு

விக்கிரவாண்டியில் ஊதியத்தில் பிடித்த தொகையை கடன் சங்கத்தில் கட்டாததால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் பேரூராட்சி அலுவலக கதவை இழுத்து பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-05-11 18:45 GMT


விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்திலிருந்து கடன் பெற்று இருக்கிறார்கள். இந்த கடன் தொகையை, அவரவர் ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்து வசூலிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் கூட்டுறவு சங்கத்தில் இருந்து கடன் பெற்றவர்களுக்கு, நோட்டீசு ஒன்று அனுப்பப்பட்டது. அதில், பேரூராட்சியில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து மார்ச் 2023-ம் ஆண்டு வரை 7 மாதத்துக்கு, கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை.

தொழிலாளர்கள் அதிர்ச்சி

இதனால் சங்கத்துக்கு 3 லட்சத்து 59 ஆயிரத்து 617 ரூபாய் வட்டி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, கடன் கேட்பு தொகை ரூ.60 லட்சத்து 72 ஆயிரத்து 139 என்று மொத்தம் ரூ.64 லட்சத்து 31 ஆயிரத்து 756-ஐ திருப்பி செலுத்த வேண்டும் என்று தொிவிக்கப்பட்டு இருந்தது.

மாதந்தோறும், தங்களுக்கு கடன் கட்டுவதற்கான தொகை, ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து தான் பேரூராட்சியில் இருந்து ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது கடன் சங்கத்தில் கடன் தொகை கட்டப்படவில்லை என்று நோட்டீசு வந்து இருப்பது கடன் வாங்கியிருந்த தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தர்ணா போராட்டம்

இதனால் வெகுண்டெழுந்த தொழிலாளர்கள் நேற்று காலை 7.45 மணிக்கு பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அலுவலகத்தின் நுழைவு வாயில் இரும்புக் கதவை மூடி, அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம், துணை தலைவர் பாலாஜி, துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், கவுன்சிலர்கள் ரமேஷ், வீரவேல் ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

அதில், வரும் மாதத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை கூட்டுறவு சங்கத்திற்கு திருப்பி கட்டிவிடுவதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்தபகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்