உப்பு உற்பத்தி பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-09-18 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி

வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் இங்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரி மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது.கடந்த மாதம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்ததால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் உப்பள தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்து வீட்டில் இருந்தனர்.

உப்பு உற்பத்தி பணி மும்முரம்

தற்போது வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மழைக்காலம் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி இலக்கை எட்டுவதற்கு இரவு, பகல் பாராமல் உப்பை உற்பத்தி செய்து வருகின்றனர். மேலும் மழை காலத்திற்கு உப்பை விற்பனை செய்ய ஏதுவாக உற்பத்தி செய்த உப்பை அம்பரம் அமைத்து அதனை பனைமட்டை மற்றும் பிளாஸ்டிக் தார்பாய் கொண்டு மூடும் பணியிலும் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

உற்பத்தியாளர்கள் பாதிப்பு

இதுகுறித்து சிறு-குறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் புகழேந்தி கூறுகையில்,வேதாரண்யத்தில் சிறு-குறு உப்பு உற்பத்தியாளர்கள் 800 பேர் இந்த ஆண்டு உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் ஒவ்வொரு மாதமும் மூன்று அல்லது நான்கு முறை பெய்த மழையினால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு உப்பு உற்பத்தியாளர்கள் 3 லட்சம் டன்னும், தனியார் கம்பெனிகள் 3½ லட்சம் டன்னும் ஆண்டுதோறும் உற்பத்தி செய்கின்றனர்.ஆனால் இந்த ஆண்டு சரி பாதி அளவு கூட உப்பு உற்பத்தி செய்ய முடியவில்லை. உப்பிற்கு நல்ல விலை இருந்தும் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்