தொழிலாளி தற்கொலை : 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
நச்சலூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயலில் ஆண் பிணம்
கரூர் மாவட்டம், நச்சலூர் அடுத்துள்ள நெய்தலூர் கோட்டைமேட்டில் உள்ள ஒரு கோழிப்பண்ணை அருகே வயலில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று காலை பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ரூபினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மனைவியை பிாிந்தார்
போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடப்பது தோகைமலை அருகேயுள்ள ஆர்ச்சம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் சில மாதங்களுக்கு முன்பு தொழிலாளியாக வேலை செய்து வந்த தளிஞ்சி ஊராட்சி ரெங்காச்சிப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி (வயது 45) என்பவரும் அவருக்கு ஏற்கனவே கலா என்பவருடன் திருமணமாகி கடந்த 10 ஆண்டுகளாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.பின்னர் சுப்பிரமணிக்கும், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பன்னாங்கோம்பை சேர்ந்த சின்னகண்ணு மனைவி ெலட்சுமி (35) என்பவருக்கும் திருச்சியில் சித்தாள் வேலைக்கு செல்லும்போது, பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பழக்கத்தால் சுப்பிரமணி, ெலட்சுமியை கோழிப்பண்ணைக்கு அழைத்து வந்து கடந்த ஓராண்டாக கணவன்-மனைவியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். மேலும், இருவரும் கோழிப்பண்ணையில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.
வாக்குவாதம்
இந்நிலையில் லெட்சுமியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணி கோழிப்பண்ணையில் இருந்து சென்று விட்டார். இதனால் லெட்சுமி மட்டும் கோழிப்பண்ணையில் உள்ள பண்ணை வீட்டில் தனியாக தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி கோழிப்பண்ணைக்கு லெட்சுமியை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது லெட்சுமிக்கும், சுப்பிரமணிக்கும் இடையே குடும்பம் நடத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுப்பிரமணி கோழிப்பண்ணையில் உள்ள பண்ணை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் லெட்சுமி, சுப்பிரமணியின் உடலை அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் உதவியுடன் இழுத்து சென்று அருகில் உள்ள வயலில் போட்டது தெரியவந்தது.
கொலையா?
இதையடுத்து சுப்பிரமணி உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து லெட்சுமி மற்றும் 2 வாலிபர்களையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ேமலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற முழு விவரம் தெரியும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நச்சலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.