மதுபாட்டிலால் குத்தி தொழிலாளி கொலை

இரணியல் அருகே மதுபாட்டிலால் குத்தி தொழிலாளியை கொன்ற சகோதரரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-15 18:45 GMT

திங்கள்சந்தை:

இரணியல் அருகே மதுபாட்டிலால் குத்தி தொழிலாளியை கொன்ற சகோதரரை போலீசார் கைது செய்தனர்.

மதுபோதையில் தகராறு

குமரி மாவட்டம் இரணியல் போலீஸ் சரகம் கண்டன்விளை அருகே உள்ள குழியூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 68). இவருடைய மனைவி சுகிர்தபாய் மங்களம் (64). இந்த தம்பதிக்கு ஒரு மகளும், 7 மகன்களும் உள்ளனர். இவர்களுடைய 5-வது மகன் ஜேம்ஸ்ராஜா (35) கூலி வேலை செய்து வருகிறார். 6-வது மகன் சகாய செல்வன் (33), கட்டிட வேலை செய்து வந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. மதுகுடிக்கும் பழக்கம் உடையவர்கள்.

கடந்த 9-ந் தேதி மாலையில் மதுபோதையில் ஜேம்ஸ்ராஜாவும், சகாய செல்வனும் வீட்டுக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இருவரும் மாறி, மாறி ஆபாசமாக திட்டிக் கொண்டனர்.

சகோதரர் குத்திக் கொலை

இதில் ஆத்திரமடைந்த ஜேம்ஸ்ராஜா அருகில் கிடந்த மதுபாட்டிலை உடைத்து திடீரென தம்பி சகாயசெல்வனின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் சகாயசெல்வனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் சகாயசெல்வன் பரிதாபமாக இறந்தார்.

மேலும் இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ்ராஜாவை கைது செய்தனர். முதலில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்திருந்ததாகவும், தற்போது சகாயசெல்வன் இறந்ததால் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மதுபோதையில் சகோதரர் என்றும் பாராமல் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்