தேவூர்:-
எடப்பாடி ஆலச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மலைச்சாமி (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு 8 மணிக்கு எடப்பாடியில் இருந்து கல்வடங்கம் செல்லும் சாலையில் ேதவூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி பஸ் வந்தது. அந்த பஸ்சில் மாணவ-மாணவிகள் 5 பேர் இருந்தனர். பஸ்சை டிரைவர் சங்கரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முயன்ற போது பள்ளி பஸ் எதிர்பாராத விதமாக மலைச்சாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மலைச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.