ஆம்னி பஸ் மோதி தொழிலாளி பலி
விக்கிரவாண்டி அருகே ஆம்னி பஸ் மோதி தொழிலாளி பலி டிரைவர் கைது
விக்கிரவாண்டி
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள சென்னாகுனத்தை சேர்ந்தவர் கருணாநிதி(வயது 53). தொழிலாளியான இவர் 14 பேருடன் நேற்று முன்தினம் இரவு திருத்தணிக்கு வேலைக்காக மினி லாரியில் சென்று கொண்டிருந்தார். இரவு 11.30 மணியளவில் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வந்தபோது ஒட்டலில் சாப்பிடுவதற்காக மினி லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு அனைவரும் சாலையை கடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து எர்ணாகுளம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் கருணாநிதி மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் வழக்குப்பதிவு செய்து தஞ்சாவூரை சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் செந்தில்குமார்(42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.