மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் மலையரசு (வயது 40). கூலித்தொழிலாளி. தற்போது இவர், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் சாலையில் சேனன்கோட்டை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேடசந்தூரில் இருந்து சமத்துவபுரம் நோக்கி செல்வம் (24) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள், மலையரசு மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மலையரசு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த செல்வத்துக்கு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.