இரும்பு பலகையில் மோதி தொழிலாளி சாவு
மோட்டார் சைக்கிளில் சென்ற போது இரும்பு பலகையில் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்
பொள்ளாச்சி
மோட்டார் சைக்கிளில் சென்ற போது இரும்பு பலகையில் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சமையல் தொழிலாளி
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பகுதி யை சேர்ந்தவர் அபிலாஷ் (வயது 31). சமையல் தொழிலாளி. இவருடைய நண்பர் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த ஜூனைத் (27). இவர் கோட்டூர் ரோடு வஞ்சியாபுரம் பிரிவில் தங்கி சமையல் வேலை செய்து வருகிறார்.
அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு வஞ்சியாபுரம் பிரிவில் இருந்து மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அபிலாஷ் ஓட்டினார்.
என்.ஜி.ஓ. காலனி வளைவில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டோரத்தில் இருந்த இரும்பு பலகையில் மோதியது.
நண்பருக்கு சிகிச்சை
இதில் தூக்கி வீசப்பட்டதில் அபிலாஷ் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் அபிலாஷ் இறந்து விட்டதாக கூறினர். அங்கு ஜூனைத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.