மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி

வனவிலங்கு வேட்டைக்கு சென்றபோது மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியானார்.

Update: 2023-09-29 00:15 GMT

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி அருகே உள்ள குதிரையாறு அணை மேட்டுகளம் பகுதியை சேர்ந்தவர் ஆத்திமரத்தான். அவருடைய மகன் ராம்குமார் (வயது 27). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், வெளியே சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நேற்று அதிகாலை வரை அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராம்குமாரின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்தநிலையில் நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள தோட்ட பகுதியில் ராம்குமார் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ராம்குமார் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ராம்குமார் இறந்து கிடந்த தோட்டத்தில் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைவதை தடுக்க சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு ராம்குமார் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அங்கு வந்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்