மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி

பேரணாம்பட்டு அருகே மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார். நடவடிக்கை எடுக்காததை கண்டித்துபிணத்துடன், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-24 18:02 GMT

மோட்டார்சைக்கிள் மோதி பலி

பேரணாம்பட்டு அடுத்த எம்.வி.குப்பம் கிராமம் கோயில் மேடு பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 72). வெற்றிலை தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மேல்பட்டி கிராமத்திற்கு சென்று வெற்றிலை கொடுத்து விட்டு, மேல்பட்டி நாகதோப்பு பகுதியில் மேல்பட்டி- குடியாத்தம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

எம்.வி.குப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் பாரத் குமார் (22) ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் பழனி மீது மோதியது. இதில் பழனி படுகாயமடைந்தார். உடனடியாக அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பரிதாபமாக நேற்று இறந்தார்.

பிணத்துடன் மறியல்

பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் பழனியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து குறித்து மேல்பட்டி போலீசார் விசாரிக்கவோ, எவ்வித நடவடிக்கையோ எடுக்கவில்லை என்று கூறி பழனியின் உறவினர்கள் போலீசை கண்டித்து பிணத்துடன் கோயில்மேடு பகுதியில் மேல்பட்டி- ஆம்பூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 1½ மணி நேரம் மறியல் நடைபெற்றதால் திருப்பத்தூர் மாவட்ட எல்லையான பச்சகுப்பம் கிராமம் வரையில் வாகனங்கள் வரிசையில் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, மேல்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் குப்பன், சத்திய மூர்த்தி, சபாரத்தினம் மற்றும் போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் பாரத் குமார் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் பழனியின் உடலை அவரது குடும்பத்தினர் எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்