மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலியானார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா பெலாந்துறை கணபதி குறிச்சி வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்தவர் பாஸ்கர், கூலி தொழிலாளி. இவரும், பெலாந்துறை கொண்டித்தெருவை சேர்ந்த சேகரும் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் பெலாந்துறைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை சேகர் ஓட்டினார். ஆண்டிமடம்-அழகாபுரம் சாலையில் சிலுவைச்சேரி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பாஸ்கர் பரிதாபமாக இறந்தார். சேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஆண்டிமடம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.