மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி தொழிலாளி பலி

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

Update: 2023-08-29 08:08 GMT

உத்திரமேரூர்

உத்திரமேரூர் ஒன்றியம் ராவத்தநல்லூர் காலனியைச் சேர்ந்தவர் முத்து (வயது 29). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. காரணி மண்டபம் அருகே சென்றபோது சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் நிலை தடுமாறி மோதினார்.

இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அந்த வழியாக வந்தவர்கள் விபத்து குறித்து பெருநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

உத்திரமேரூர் ஒன்றியம் இளநகர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். விவசாயி. இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (55). கணவன் மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் நேற்று முன்தினம் சாமுண்டீஸ்வரி வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்து எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் அவரை அக்கம்பக்கத்தினர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை சாமுண்டீஸ்வரி பலியானார். இதுகுறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்