மரத்தில் மினி லாரி மோதி தொழிலாளி பலி

அரவக்குறிச்சி அருகே மரத்தில் மினி லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-11-07 19:13 GMT

மரத்தில் மோதிய மினி லாரி

கரூர் மாவட்டம், நொய்யலில் இருந்து கல் தூண்களை ஏற்றிக் கொண்டு ஒரு மினி லாரி திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த மினி லாரியை ஈரோடு மாவட்டம், பெரிய வட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி (வயது 56) என்பவர் ஓட்டி வந்தார். மினி லாரியின் பின்பகுதியில் தொழிலாளர்கள் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த முரளி (45), திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரை சேர்ந்த மூர்த்தி (60), ஈரோடு மாவட்டம் பெரிய வட்டத்தை சேர்ந்த மணி (55), ஈரோடு மாவட்டம் சோளிகாளிபாளையத்தை சேர்ந்த சேகர் ஆகிய 4 பேர் அமர்ந்து வந்தனர்.

அந்த மினி லாரி நேற்று மதியம் அரவக்குறிச்சி கோட்டப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதியது.

தொழிலாளி பலி

அப்போது மோதிய வேகத்தில் மினிலாரியின் பின்னால் அமர்ந்து வந்த முரளி மீது கற்கள் விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சேகர் படுகாயம் அடைந்தார். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த சேகரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்