கொதிக்கும் வெந்நீரில் விழுந்த தொழிலாளி சாவு
விருத்தாசலம் அருகே குளிப்பதற்காக வைத்திருந்த கொதிக்கும் வெந்நீரில் விழுந்த தொழிலாளி இறந்தார்.
மங்கலம்பேட்டை:
விருத்தாசலம் அருகே உள்ள தொட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 37), தொழிலாளி. இவரது மனைவி ராஜசுந்தரி (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று ராஜசுந்தரி தனது குழந்தைகள் குளிப்பதற்காக வீட்டின் முன்பு உள்ள விறகு அடுப்பில் வெந்நீர் வைத்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும் போது, செல்வக்குமார் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தடுமாறி, கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரில் விழுந்தார். இதில் உடல் முழுவதும் வெந்ததில், வலியால் அலறி துடித்தார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இந்த சத்தம் கேட்டு வந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராஜசுந்தரி, மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் வெந்நீரில் தவறி விழுந்த தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.