மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி சாவு
தூசி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஐயங்கார் குளம் கிராமம் சஞ்சீவி நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் செல்வம் (வயது 42), நெசவுத் தொழிலாளி. இவர், மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே காஞ்சீபுரம்-மோரணம் சாலையில் மின்சார வாரியம் அருகில் வந்து கொண்டிருந்த போது நிலைத் தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.