பஸ் மோதி தொழிலாளி சாவு

ஆறுமுகநேரி அருகே பஸ் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-29 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அருகே பஸ் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி

தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 62). இவர் செல்போன் கோபுர வேலை பார்த்து வந்தார். தூத்துக்குடி மேலசண்முகபுரம் முதல் தெருவை சேர்ந்த அலெக்சாண்டர் மகன் பபியான் (40). இவரும் அதே வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் இருவரும் நேற்று காலை தூத்துக்குடியில் இருந்து பபியான் மோட்டார் சைக்கிளில் வேலைக்காக திருச்செந்தூர் நோக்கி சென்றனர். சாகுபுரம் அருகே வளைவில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக தெரிகிறது. இதில் அருள்ராஜ், பபியான் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். அருள்ராஜ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டிய பபியானுக்கு கை முறிந்தது. மேலும் அவரது தோள் பட்டை, கை விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

டிரைவர் கைது

தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். காயம் அடைந்த பபியானை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் அருள்ராஜ் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக காயம் அடைந்த பபியான் மற்றும் அருள்ராஜ் மகள் அமுதா ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் தூத்துக்குடி கதிர்வேல் நகர் 3-வது தெருவை சேர்ந்த மரிய அடைக்கலம் மகன் ஜெரால்டு லாரன்ஸ் என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்