டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
சிவகிரி அருகே, டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி இறந்தார்.
சிவகிரி:
சிவகிரி அருகே, டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி இறந்தார்.
தொழிலாளி
தேனி மாவட்டம் தேனி-அல்லிநகரம் மச்சால் தெருவை சேர்ந்த சுப்பா நாயுடு மகன் முருகன் (வயது 46). இவர் தேனி அல்லிநகரத்தில் உள்ள ஒரு தனியார் பலசரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார்.
தேனி பகுதியில் இருந்து தென்காசி மாவட்டம் சிவகிரி, கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு மளிகை பொருட்களை வேன், லாரி மூலம் பலசரக்கு கடைகளுக்கு வியாபாரத்திற்காக அனுப்பி வைப்பார்கள். இதற்காக ஒவ்வொரு வாரமும் பணம் வசூல் செய்ய வந்துவிட்டு தேனிக்கு செல்வது வழக்கம்.
டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதியது
இதேபோல் வசூல் செய்வதற்காக கடையநல்லூருக்கு வந்து விட்டு இரவு 7 மணியளவில் தேனிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சிவகிரிக்கு தெற்கே தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாவையில் வெற்றிலை மண்டபம் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சிவகிரி கீழமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்து இருளப்ப தேவர் மகன் நாகராஜன் (35) என்பவர் டிராக்டரை வாசுதேவநல்லூரிலிருந்து ஓட்டி வந்து வெற்றிலை மண்டபம் அருகே நிறுத்தி வைத்திருந்தார். அப்போது டிராக்டரின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியது.
சாவு
இதில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த முருகன் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முருகன் இறந்தார்.
தகவல் அறிந்ததும் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி (பொறுப்பு) தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
விபத்தில் இறந்து போன முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.