கோவை சுந்தராபுரத்தை அடுத்த மாச்சம்பாளையத்தை சேர்ந்தவர் ஹரி (வயது 32). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளது. ஆவாரம்பாளையத்தில் உள்ள தொழிற்சாலையில் ஹரி பணியாற்றியதாக தெரிகிறது. அவர், நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் குறிச்சிகுளம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் திடீரென்று ஹரி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த ஹரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தால் கோவை -பொள்ளாச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அறிந்த போலீசார் விரைந்து சென்று ஹரியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரி மீது மோதி விட்டு தப்பிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இதற்காக அங்குள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
----