எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள கஸ்தூரிபட்டி போயர் தெருவை சேர்ந்தவர் பெத்தன் மகன் அண்ணாமலை (வயது 44). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அண்ணாமலைக்கும் வரகூரை சேர்ந்த ராஜா மனைவி கோகிலா என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த ராஜா நேற்று கஸ்தூரிபட்டிக்கு சென்று அங்கிருந்த அண்ணாமலையை வெட்ட முயன்றதாக தெரிகிறது. பின்னர் மாலை ராஜாவின் மாமியார் மற்றும் மைத்துனர் ஆகியோர் அண்ணாமலையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து வெளியில் சென்ற அண்ணாமலை வீட்டிற்கு வந்து மனைவியிடம் நிற்க முடியவில்லை எனக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி விஜயலட்சுமி உடனடியாக கார் மூலம் பவித்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது பரிசோதித்த மருத்துவர் அண்ணாமலை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.