விக்கிரவாண்டியில் மகன் இறந்த விரக்தியில் ரெயில்முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை

விக்கிரவாண்டியில் மகன் இறந்த விரக்தியில் ரெயில்முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-03 17:11 GMT

விக்கிரவாண்டி, 

மகன் சாவு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணவாளன்(வயது 60). கூலித்தொழிலாளி. இவருடைய 2-வது மகன் கந்தன்(35). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இறந்து விட்டார்.

மகன் இறந்ததை கண்டு மணவாளன் மற்றும் குடும்பத்தினர் வேதனையில் இருந்தனர். மகன் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்த மணவாளன் கதறி அழுது கொண்டிருந்தார். உறவினர்கள் ஆசுவாசப்படுத்தியும் அவர், மகன் இறந்த துக்கத்தில் இருந்து மீளவில்லை.

ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

இந்த நிலையில் அன்றைய தினம் இரவு 9 மணியளவில் வீட்டின் அருகே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு மணவாளன் சென்றார். அப்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு மணவாளன் பாய்ந்தார். ரெயில் என்ஜின் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவர், துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த செங்கல்பட்டு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணவாளனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகன் இறந்த விரக்தியில் ரெயில் முன்பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்