அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே உள்ள திடல் கடம்படிவிளாகம் காலனி பகுதியை சேர்ந்தவர் வரம்பெற்றான். இவருடைய மகன் அஸ்வின் (வயது 20), தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வெளியே சென்ற அஸ்வின் வீட்டுக்கு திரும்பினார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு திரும்பிய அவரது தந்தை வரம்பெற்றான் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு சந்தேகமடைந்தார். உடனே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அஸ்வின் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, அவரை மீட்டு 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். ஆம்புலன்சு ஊழியர்கள் வந்து அஸ்வினை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், இதுபற்றி பூதப்பாண்டி போலீசாருக்கு ெதரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அஸ்வினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வின் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.