தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
உடன்குடியில் பணம் வாங்கியவர்கள் திருப்பித்தராமல் ஏமாற்றியதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
உடன்குடி:
உடன்குடியில் பணம் வாங்கியவர்கள் திருப்பித்தராமல் ஏமாற்றியதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை பகுதியைச் சேர்ந்த கலீல் ரகுமான் மகன் முஜாகிதீன் (வயது 30). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை.
இவர் பல இடங்களில் சென்று வேலை பார்த்து தான் உழைத்து சம்பாதித்த பணத்தை பலரிடம் கடனாக கொடுத்துள்ளார். ஆனால் இவரிடம் பணம் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் முஜாகிதீன் மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் ஆட்கள் இல்லாத போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடிதம் சிக்கியது
மேலும் வீட்டில் முஜாகிதீன் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தன்னிடம் பணம் வாங்கியவர்கள் திருப்பி தராமல் என்னை ஏமாற்றி வருகின்றனர். அதனால் மனமுடைந்து இந்த முடிவை எடுத்துள்ளேன்' என்று எழுதியுள்ளார். மேலும் அதில் தன்னிடம் பணம் வாங்கியவர்கள் யார்?, ஒவ்வொருவரும் எவ்வளவு பணம் வாங்கியுள்ளனர்? என்ற விவரத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.