கட்டிட பணியின்போது மண்ணில் புதைந்த தொழிலாளி; உடனடியாக மீட்கப்பட்டார்

கொடைக்கானல் அருகே கட்டிட பணியின்போது மண்ணில் புதைந்த தொழிலாளி உடனடியாக மீட்கப்பட்டார்.

Update: 2022-10-15 17:12 GMT

கொடைக்கான‌ல் அருகே வில்ப‌ட்டியில், பிரதான சாலையோரத்தில் வீடு க‌ட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அங்கு இன்று கட்டிட தூண்கள் அமைப்பதற்காக குழிகள் தோண்டும் பணி நடந்தது. இந்த பணியில் அதே ஊரை சேர்ந்த மாரிமுத்து, ஜெயபாண்டி ஆகிய 2 கட்டிட தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் 2 பேரும் வேலை செய்து கொண்டிருந்தபோது, சாலையோரம் இருந்த மண் குவியல் திடீரென்று சரிய தொடங்கியது. இதனை கவனிக்காமல் மாரிமுத்து வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று மண் குவியல் மாரிமுத்து மீது விழுந்தது. இதில் அவர் கழுத்து மட்ட அளவில் மண்ணில் புதைந்துபோனார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயபாண்டி, மண்ணில் புதைந்த மாரிமுத்துவை மீட்க முயன்றார். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் சாலையில் சென்றவர்களை ஜெயபாண்டி உதவிக்கு அழைத்தார். இதையடுத்து அவர்களுடன் சேர்ந்து மாரிமுத்துவை ஜெயபாண்டி பத்திரமாக மீட்டார்.

பின்னர் மாரிமுத்து சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளி மண்ணில் புதைந்த சம்பவம் வில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மண்ணில் புதைந்த தொழிலாளியை பத்திரமாக மீட்ட சக தொழிலாளி ஜெயபாண்டி மற்றும் பொதுமக்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்