தொழிலாளி அடித்துக்கொலை; ஒருவர் கைது
குன்னம் அருகே தொழிலாளியை அடித்துக்கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தகராறு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜெகதாம்பாள் மரணம் அடைந்தார். இதையடுத்து அவருடைய இறுதிச்சடங்கு கடந்த மாதம் 28-ந் தேதி மாலை கூத்தூரில் உள்ள சுடுகாட்டில் நடைபெற்றது.
அப்போது ஜெகதாம்பாள் உறவினர்களான கூத்தூரை சேர்ந்த கூலி தொழிலாளியான இளவரசனுக்கும் (வயது 48), அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் (52), அவரது மகன் இனியன் (24) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அடித்துக்கொலை
இதில் ஆத்திரம் அடைந்த இனியன் இளவரசனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்து சுருண்டு விழுந்த இளவரசனை உறவினர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இளவரசன் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இனியனை வலைவீசி தேடி வருகின்றனர்.