தொழிலாளி அடித்துக்கொலை-அண்ணன் கைது
சேலத்தில் சொத்து தகராறில் தொழிலாளியை அடித்துக்கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளர்கள்
சேலம் பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் செங்கல் அணை ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி. அவரது மனைவி பாக்கியம். இவர்களுக்கு செல்வம் (வயது 52), ராஜகணபதி (47) என்ற 2 மகன்களும், மாலா என்ற ஒரு மகளும் இருந்தனர். செல்வமும், ராஜகணபதியும் கூலி தொழில் செய்து வந்தனர். மேலும் அவர்களுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
செல்வத்துக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதேபோல் ராஜகணபதி மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே அவரது மனைவி குழந்தைகளுடன் அவரை பிரிந்து சென்று விட்டார்.
சொத்து தகராறு
செல்வம், தனது தந்தையின் பெயரில் உள்ள நிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக வீடு கட்டினார். முதல் மாடியில் அவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கீழ் தளத்தில் ராஜகணபதியும், அவரது தாய் பாக்கியமும் வசித்து வந்தனர். இதனிடையே ராஜகணபதி தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து கொடுக்குமாறு செல்வத்திடம் கேட்டார். இதனால் அண்ணன், தம்பி இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜகணபதி, செல்வத்தின் மனைவி ஸ்ரீதேவியை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அப்போது போலீசாரிடம் ஸ்ரீதேவி, சொத்து கேட்டு ராஜகணபதி அடிக்கடி தகராறு செய்து வருவதுடன், வீட்டில் உள்ள சமையல் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார் என்று கூறினார்.
அடித்துக்கொலை
இதையடுத்து போலீசார் அவரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் ராஜகணபதி, இனிமேல் எந்த பிரச்சினையும் செய்ய மாட்டேன் என்று எழுதி கொடுத்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வம், ராஜகணபதி ஆகியோர் இடையே சொத்து பிரச்சினை காரணமாக மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த செல்வம் அங்கிருந்த செங்கல் மற்றும் உருட்டு கட்டையால் ராஜகணபதியின் தலை மற்றும் முகத்தில் சரமாரியாக அடித்தார். இதில் படுகாயம் அடைந்த ராஜகணபதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை குறித்து அக்கம் பக்கத்தினர் அம்மாபேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர் கவுதம் கோயல், உதவி கமிஷனர் சரவணகுமரன், இன்ஸ்பெக்டர்கள் கணேசன், சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அண்ணன் கைது
பின்னர் ராஜகணபதியின் உடலை போலீசார் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக செல்வத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சொத்து கேட்டு தகராறு செய்து வந்ததால், தம்பியை அவர் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.
சேலத்தில் சொத்து தகராறில் தம்பியை, அண்ணனே அடித்துக்கொலை செய்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.