விவசாயி வீட்டில் தங்க சங்கிலி திருடிய தொழிலாளி கைது
விவசாயி வீட்டில் தங்க சங்கிலி திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள வீராங்குளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 70). விவசாயியான இவருக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக வீட்டில் இருக்கிறார். இவருக்கு முடி வெட்டுவதற்காக முடிவெட்டும் தொழிலாளி பால்ராஜ் (50) என்பவரை நேற்று காலை வீட்டுக்கு வரவழைத்தார்.
அப்போது சுப்பிரமணியனின் மனைவி சீதாலட்சுமி தனது 4½ பவுன் தங்க சங்கிலியை கழட்டி வீட்டில் ஒரு இடத்தில் வைத்து விட்டு விவசாய வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் அவர் வந்து பார்த்த போது தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சீதாலட்சுமி நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சுப்பிரமணியனுக்கு முடிவெட்ட வந்த பால்ராஜ் சங்கிலியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து, பால்ராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து தங்க சங்கிலியும் மீட்கப்பட்டது.