"ஊராட்சியை நல்ல முறையில் வழிநடத்த தலைவர்களுடன் இணைந்து செயலாற்றுங்கள்"

ஊராட்சியை நல்ல முறையில் வழிநடத்த ஊராட்சி மன்ற தலைவர்களுடன், ஊராட்சி செயலாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

Update: 2023-05-30 18:45 GMT

கடலூர்:

கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அந்த ஊராட்சிகளை சேர்ந்த செயலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் கடலூர் கூத்தப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

பதிவேடுகள்

15-வது நிதிக்குழு மானிய திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் செயல்படுத்தக்கூடிய அனைத்து திட்டங்களையும் ஊராட்சி மன்ற தலைவர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் கடமைகளை நன்கு அறிந்து மக்கள் உங்களை தேர்ந்தெடுத்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் உங்களது சேவைகள் அமைய வேண்டும்.

அதற்கேற்ப ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சியை நல்ல முறையில் வழி நடத்த தலைவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். மேலும் ஊராட்சி செயலாளர்கள் கிராமத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகள் குறித்து பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.

நடவடிக்கை

ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் கிராமத்தை 100 சதவீதம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். நெகிழி இல்லா கிராமமாக உருவாக்க வேண்டும். தங்கள் ஊராட்சிகளில் உள்ள குழந்தைகள் பள்ளியில் இடைநிற்றல் இல்லாமல் 100 சதவீதம் கல்வி கற்பதை ஊராட்சி மன்ற தலைவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். சட்டவிரோதமாக மது உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தால் ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் ஏணியை தகுந்த பாதுகாப்பு டன் கதவு போட்டு மூட வேண்டும். மேலும் குளோரினேஷன் குழாய்களை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முழுமையாக 100 நாட்கள் வேலை அளிக்கும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கவுரவிக்கப்படுவார்கள். அடுத்த 2 ஆண்டுகளில் மக்கள் பணியை சிறப்பான முறையில் மேற்கொண்டு சிறந்த ஊராட்சி மன்ற தலைவராக விளங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்