பாலத்தை அகலப்படுத்தும் பணி மும்முரம்
பொள்ளாச்சி அருகே விபத்துகளை தடுக்க பாலம் அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி அருகே விபத்துகளை தடுக்க பாலம் அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
குறுகலான பாலம்
பொள்ளாச்சி அருகே நா.மூ.சுங்கத்தில் இருந்து உடுமலை செல் லும் ரோடு உள்ளது. இது, ஆனைமலை, வால்பாறையில் இருந்து உடுமலை, மதுரை செல்வதற்கு முக்கிய சாலை ஆகும். இதனால் அந்த ரோட்டில் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும்.
இந்த நிலையில் பூவலப்பருத்திக்கும், ரெட்டியாரூக்கும் இடையில் ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக அமைக்கப்பட்ட பொள்ளாச்சி கால்வாய் செல்கிறது. அந்த ரோட்டில் உள்ள பாலம் குறுகலாக உள்ளது.
இதனால் ஒரு வாகனம் வரும் போது மற்றொரு வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகனங்கள் கால்வாயில் விழும் அபாயம் உள்ளது.
அகலப்படுத்தும் பணி
எனவே விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் அந்த பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலத்தை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், உடுமலை ரோட்டில் பொள்ளாச்சி கால்வாயின் மேல் உள்ள பாலத்தை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்கவும், உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.
விரைந்து முடிக்க வேண்டும்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நா.மூ.சுங்கத்தில் இருந்து உடுமலை செல்லும் ரோடு மிகவும் குறுகலானது.
இதில் தண்ணீர் ஓடும் பொள்ளாச்சி கால்வாய் மேல் உள்ள பாலத்தை அகலப்படுத்துவதோடு இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண் டும்.
இதனால் பாலத்தின் ஓரத்தில் செல்லும் போது வாகனங்கள் கால்வாய்க்குள் விழாமல் தடுக்க முடியும். மேலும் பாலத்தை அகலப்படுத்தும் பணியை விரைந்து செய்து முடித்து போக்குவரத்துக்கு திறக்க வேண்டும் என்றனர்.